இருள் சூழ்ந்ததால்... உறக்கத்தில் ஆழ்ந்த விக்ரம் லேண்டர்.

விக்ரம் லேண்டர் மீண்டும் உயிர்த்தெழப் போவது எப்போது? 
சந்திரயான் - 3: 




நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்ததால்... தற்போது விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு சென்றுள்ளது. அங்கே வெளிச்சம் வரும்போது மீண்டும் அது செயல்படத் துவங்கும் என்றும் நம்பப்படுகிறது. 



அமெரிக்கவின் நாசா  விண்வெளி ஆய்வு நிறுவனம்  நிலவின் மீது தரையிறங்கிய சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை எடுத்து  வெளியிட்டுள்ளது. 


நாசா வெளியிட்டுள்ள  இந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் ஒரு சிறிய புள்ளியாகத் தெரிகிறது.
அதனைச் "சுற்றியுள்ள இடத்தில் பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே அதன் இருண்ட நிழல் தெரிகிறது" என்று நாசா  தெரிவித்துள்ளது.




சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட்-23 அன்று நிலாவில் அதிகம் ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தில் தரை இறங்கியது.


அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து, நிலாவைச் சுற்றிவரும்... நாசாவின்  லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டரில் உள்ள கேமரா இந்தப் புகைப்படத்தை எடுத்ததாக நாசா  தெரிவித்துள்ளது! 



கடந்த மாதம், விக்ரம் லேண்டர் - பிரக்யான் என்ற ரோவரை அதன் வயிற்றில் சுமந்து கொண்டு - நிலாவின் தென் துருவத்திலிருந்து சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள தரையில் இறக்கப்பட்டது.


இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயர் இந்தியாவுக்குக் கிடைத்தது.

அமெரிக்கா, ரஷ்யாவின் முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து, நிலவில் மென்மையாக  தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.


விக்ரம் லேண்டர், மற்றும் பிரக்யான் ரோவர் நிலாவின் மேற்பரப்பில் சுமார் 10 நாட்கள் செயல்பட்டன. 


அங்கிருந்த தரவுகள் மற்றும் படங்களை சேகரித்து பூமிக்கு அனுப்பியது.

"தங்கள் நோக்கங்கள் நிறைவடைந்து விட்டதாக" இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கூறியுள்ளது.

கடந்த வார இறுதியில், சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால் லேண்டரையும்,  ரோவரையும்  உறக்க நிலையில் வைக்கப்பட்டதாக கூறியுள்ளது.

"சூரிய சக்தி குறைந்து பேட்டரி தீர்ந்தவுடன் லேண்டரும் ரோவரும் தூங்கிவிடும்" என்றும் இஸ்ரோ ஏற்கனவே  கூறியிருந்தது! 

நிலவின் தென் துருவத்தில் சூரியன்  மீண்டும் உதிக்கத் தொடங்கும் அடுத்த நாளான செப்டம்பர் 22-ஆம் தேதி லேண்டரும் ரோவரும் மீண்டும் உயிர்த்து எழும் என்று நம்புவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.


லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கும் அது  செயல்படுவதற்கும் சூரிய ஒளி  அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.



இந்திய விண்வெளி நிறுவனம் ISRO தனது லேண்டர் மற்றும் ரோவரின் இயக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்,  மற்றும் அவைகள் எடுத்த படங்களையும் அப்டேட்டுகளையும் இதுவரை  பகிர்ந்துள்ளது. 


இந்த வார தொடக்கத்தில், நிலவின் மேற்பரப்பில் விக்ரம் ஒரு "வெற்றிகரமான ஹாப் பரிசோதனையை" செய்ததாகவும்  இஸ்ரோ கூறியது. 


இந்தப் பரிசோதனையின் போது விக்ரம் லேண்டர் மீண்டும் ஒருமுறை நிலவின் தரைப்பரப்பில் இருந்து (மேல்நோக்கிப் பறந்து)  குதித்து மீண்டும் தரையிறங்கியது.


சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர் "அதன் சிறு ராக்கெட்டுகளை உயிர்ப்பித்தவுடன் அது சுமார் 40 அடி உயரத்துக்கு குதித்து 30-40 அடி தொலைவில் மீண்டும் தரையிறங்கியது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

அதாவது... லேண்டரில்  மீதமாக இருந்த எரிபொருள் மூலமாக இஸ்ரோ இதை செய்து பார்த்தது.


இந்த சோதனை மூலம் எதிர்காலத்தில் நிலாவில் இருந்து பொருள்களை கொண்டு வரவும், மனிதர்களை அழைத்துச் செல்லவும் விண்கலம் பயன்படுத்தப்படலாம் என்றும் ISRO மேலும் கூறியுள்ளது.